டில்லி

கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்கள் போட்டுக் கொள்ளும் கால இடைவெளியை அதிகரிக்க  அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.  தற்போது நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  இதுவரை 16.25 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  மே 1 முதல் 18-44 வயது உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளதாக அறிவித்த போதிலும் மருந்து தட்டுப்பாடு காரணமாகத் தொடங்கப்படவில்லை.

தற்போது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.   இதில் கோவிஷீல்ட் மருந்துக்கு இரு டோஸ்களுக்கு இடையில் 4 முதல் 6 வாரங்களும் கோவாக்சின் மருந்துக்கு 4 வாரங்கள் வரை இடைவெளி விட அரசு பரிந்துரைத்துள்ளது.     இதில் கோவிஷீல்ட் மருந்துக்கான கால அவகாசம் 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒரு சில வெளிநாட்டு ஆய்வு முடிவுகள் கோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி 12 வாரங்கள் வரை நீட்டிக்கலாம் எனக் கூறுகின்றன.  குறிப்பாக இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளும் இடைவெளி அதிகரித்தால் கோவிஷீல்ட் நோய்த் தடுப்பு திறன் அதிகமாகும் எனத் தெரிவித்துள்ளன.

எனவே இந்திய அரசு இந்த இடைவெளியை அதிகரிப்பது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றது.  இதனால் இந்தியாவுக்கு இருவகையில் ஆதாயம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

முதலாவதாக வானளாவிய அளவுக்கு தற்போது தடுப்பூசிகளின் தேவை உள்ளதை அரசால் உடனடியாக சமாளிக்க முடியும்.  மே 1 முதல் 18 வயதைத் தாண்டியவர்கள் அனைவருக்கும் குறைந்தது முதல் டோஸ் தடுப்பூசி போட முடியும்.  அதற்குள் மற்ற தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரித்து தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கும்.

இரண்டாவதாக இரண்டாம் டோஸ் போட்டுக் கொள்வோரின் கூட்டம் வெகுவாக குறையும்.   இந்த இடைவெளியில் புதிய மருந்துகளை முதல் டோஸ் போட்டுக் கொள்வோருக்கு அளிப்பதன் மூலம் கோவிஷீல்ட் தட்டுப்பாடு மிகவும் குறையவும் வாய்ப்புள்ளது.