சென்னை:

வீட்டு மனைகள் வரைமுறைபடுத்தும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் புதிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ‘‘அனுமதியற்ற மனை பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மனைகளை வரன் படுத்த 6 மாதம் அவகாசம் என்பதை ஒரு ஆண்டாக 2018-ம் ஆண்டு மே மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது விற்கப்பட்ட மனை அடிப்படையில் மனை பிரிவுகளை 3 பிரிவுகளாக பிரித்து வரன்முறைப்படுத்தும் முறை நீக்கப்படுகிறது.

அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனை பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும். ஒரு மனைப்பிரிவில் குறைந்தபட்சம் ஒருமனை விற்பனை செய்யப்பட்டால் அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும்.மனைப்பிரிவில் உள்ள சாலைகள் உள்ளது உள்ளபடி நிலையில் வரன்முறைப்படுத்தப்படும்.

விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீதம் நிலத்தை உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். ஓ.எஸ்ஆர். எத்தகைய அளவு இருப்பினும் விதிகளில்உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. தனிநபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன் முறைப்படுத்த ஓ.எஸ்.ஆர்-ல் விதியில் இருந்து முழு விலக்குஅளிக்கப்படுகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த அறிவிப்பில், ‘‘சென்னையை பொறுத்த வரையில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20 வரை வரன்முறைப்படுத்தப்பட்டதாக கருதப்படும். சென்னை தவிர ஊரக பகுதிகளில் 1972-ம் ஆண்டு நவம்பர் 29 முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20 வரையிலும்,சென்னை தவிர பிற நகரப்பகுதிகளில் 1980ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20 வரையிலும் வரன்முறைப்படுத்தப்பட்டதாக கருதப்படும். மேற்கண்ட தேதிகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து மனைகளும் வரன்முறைப்படுத்தப்பட்டாக கருதப்படும்.

மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சிக் கட்டணம் ரூ.600-ல் இருந்து 500ஆக குறைக்கப்படுகிறது. வரைமுறைக்கட்டணம் ரூ.100 ஆகவும், நகராட்சி நிலை 1மற்றும் நிலை 2 ஆகிய பகுதிகளில் வளர்ச்சிக் கட்டணம் ரூ150, வரன்முறைக்கட்டணம் ரூ.60 ஆகவும் , நகராட்சி சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை வளர்ச்சி கட்டணம் ரூ.250, வரன்முறை கட்டணம் ரூ. 60 ஆகவும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி பகுதிகளில் குறைக்கப்பட்ட வளர்ச்சிக்கட்டணம் ரூ.75,வரன் முறைக்கட்டணம் ரூ.30 ஆகவும், கிராம ஊராட்சியில் குறைக்கப்பட்ட வளர்ச்சிக் கட்டணம் ரூ.25வரன்முறைக்கட்டணம்ரூ.30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் மேற்கண்ட கட்டணத்துடன் மனை ஒன்றிற்கு கூர்ந்தாய்வு கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.