சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட ரயில் சேவை மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் முழுமையாக இயக்கப்படாத நிலையில், ஜூன் முதல் முழுமையாக இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 2020ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, ரயில், பேருந்து, விமானம் உள்பட அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
பின்னர், பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சொந்த ஊர் செல்லும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர் படிப்படியாக ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்கும் வகையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சுமார் 60 சதவிகித ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே தென்மாவட்டங்களுக்கு தினசரி இயக்கப்பட்டு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் சிறப்பு ரயில்களாகவே தற்போதுவரை இயக்கப்படுகிறது. இந்த ரயில்களை வழக்கமான ரயில்களாக இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவில்லை. இது பொதுமக்களிடையே அதிருப்தி எழுந்துள்ளதுடன், முன்புபோல வழக்கமான ரயில்களை இயக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதுபோல புறநகர் ரயில்களையும் முழுமையாக இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகஅரசும் ரயில்சேவையை முழுமையாக இயக்க ரெயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் உள்ளது.
இந்த நிலையில், வரும் ஜூன் முதல் இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட பொதுப்பெட்டிகள் மீண்டும் முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டிகளாக மாற்றி இயக்கப்பட இருப்பதாகவும், முன்புபோல முழு அளவில் ரயில்களை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளதாக கூறப்டுகிறது.