மீண்டும் பதவி தராதது வருத்தம்: மைத்ரேயன் ‘ஓப்பன் டாக்’

Must read

சென்னை:

15ஆண்டு காலம் அதிமுக எம்.பி.யாக பதவி வகித்த, மைத்ரேயன், இந்த முறையும் தனக்கு எம்.பி. பதவியை அதிமுக தலைமை தர மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். இது தனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறி உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதில், மைத்ரேயனும் ஒருவர். இவர் தொடர்ந்து 3 முறை எம்.பி.யாக இருந்துள்ள நிலையில், தமிழகத்திற்கான எந்தவொரு திட்டங்களுக்காகவும் களத்தில் இறங்கி போராடியது கிடையாது.

இந்த முறை அவருக்கு, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட அதிமுக தலைமை வாய்ப்பு அளிக்காத நிலையில், நேற்று ராஜ்யசபாவில் இறுதி உரை ஆற்றியபோது, தனக்கு 3 முறை எம்.பி. பதவி வழங்கினார் ஜெயலலிதா என்று கூறியவர், இதுவே தனது கடைசி உரை என்று கண்ணீர் விட்டார்.

இந்த நிலையில் சென்னை திரும்பிய மைத்ரேயன் இன்று காலை ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தவர், இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு பதினான்கரை ஆண்டுகள் அம்மா அவர்களின் குரலாக டெல்லியில் ஒலித்து நேற்று ஓய்வு பெற்று சென்னை திரும்பினேன்.

இன்று எனது முதல் கடமையாக மெரினாவில் அம்மா அவர்களின் நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தி எனது நன்றியை காணிக்கையாக்கினேன்.

நடைபெற்று முடிந்த மக்களவை, மற்றும் மாநிலங்களவை தேர்தலில் எனக்கு வாய்ப்பு தராதது வருத்தம் அளிக்கிறது. தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன், வாய்ப்பு அளிக்கவில்லை என்று அதிமுக தலைமை மீது குற்றம் சாட்டினார்.

அப்போது, செய்தியாளர்கள், அதிமுகவில் இரட்டை தலைமை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்தவர்,  ஒற்றை தலைமை, இரட்டை தலைமை இரண்டிலும் பாதகமும், சாதகமும் உள்ளது. ஒற்றை தலைமை ஆட்சி என்பது நல்லமுறையில் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். மைத்ரேயனின் பேச்சு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

More articles

Latest article