சென்னை
தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமர்ந்து பணிபுரியக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
சமீபகாலமாக தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சார்பதிவாளர் அலுவலகங்களில் திடீர் சோதனைகள் செய்து வருகிறார். இந்த சோதனையின் அடிப்படையில் பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அவ்விதம் சென்ற வாரம் அவர் பதிவுத்துறை அதிகாரிகளுடன் சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அப்போது அவர் பதிவு அலுவலர்கள் உயர் மேடையில் அமர்ந்து பணி புரிவதால் பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு பதிவு சேவை வழங்குவது சிரமமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதையொட்டி இனி வரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பணி புரிய வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது அனைத்து பண பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலம் நடப்பதால் சார்பதிவாளர்கள் பணத்தைக் கையாள தேவை இல்லை என்பதால் இந்த உயர் மேடைகள் தேவை இல்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இருக்கைகளைச் சமதளத்தில் அமைப்பதுடன் சுற்றிலும் உள்ள தடுப்புகளை உடனடியாக அகற்றவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.