சென்னை: சோழிங்கநல்லூர் – சிறுசேரி சிப்காட் இடையே 10 கிலோமீட்டர் தூரத்திற்கான உயர்மட்ட மெட்ரோ ரெயில் பாதை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது திட்டப்பணி 3 வழித்தடங்களில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.81 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 3-வது பாதையில் 19 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்டத்தில் அமைக்கப்பட திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் சோழிங்கநல்லூர்-சிறுசேரி சிப்காட் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாதை அமைக்க தனியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. இத்திட்டம் 3 வருடத்தில் முடிக்கப்பட வேண்டும். பழைய மகாபலிபுரம் ஐ.டி. நிறுவனங்களை கவரும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது. இந்த திட்டத்தின்படி  வடசென்னையில் மாதவரம் பகுதியில் தொடங்கி, பெரம்பூர், கெல்லிஸ், மயிலாப்பூர், அடையாறு வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், கடைசி 10கிலோ மீட்டர் தூரத்திற்குள் 9 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் சோழிங்கநல்லூர் ஏரி, பொன்னியம்மன் கோவில், சத்தியபாமா பல்லைக்கழகம், செம்மஞ்சேரி, காந்திநகர், நாவலூர், சிறுசேரி, சிப்காட்-1 மற்றும் சிப்காட்-2 ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தடெண்டரை கைப்பற்ற எல்.அன்.டி., ஐ.டி.டி., ஜே.எம்.சி. நிறுவனங்கள்  இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கான டெண்டர் இறுதி செய்ய 2 மாதம் ஆகும்.