காயத்ரி ரகுராம் குறித்து கருத்துகூற மறுப்பு – அதிமுக உடனான கூட்டணி தொடர்கிறது! அண்ணாமலை விளக்கம்

Must read

சென்னை:  காயத்ரி ரகுராம் குறித்து கருத்துகூற மறுத்த மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக உடனான பாஜக கூட்டணி தொடர்கிறது என்று விளக்கம் அளித்தார்.

சமீபகாலமாக மாநில பாஜகவில் குழப்பம் நீடித்து வருகிறது. மூத்த தலைவர்களை புறக்கணிப்பதாக அண்ணாமலை மீது புகார் எழுந்துள்ள நிலையில், சமீபத்தில் பாஜவில் நிர்வாகிகளிடையே நடைபெற்ற மோதல் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓபிசி பிரிவு மாநிலச் செயலர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையில் நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட் ஆனது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், திமுக பேச்சாளர் சைதை சாதிக்கை விட சூர்யாசிவா நாராசமாக பேசியுள்ளார் என விமர்சனம் செய்தார். இதனால் மோதல் வீதிக்கு வந்துள்ளது.

இதையடுத்து, காயத்ரி ரகுராம், சூர்யா சிவா ஆகியோரை சஸ்பெண்டு செய்த அண்ணாமலை, தனியார் யுடியூப் சேனல்களுக்கு பேட்டி அளிக்க தடை விதித்தார்.

இந்த நிலையில், இன்று  சென்னையில் தனியார் தேநீர் கடையை திறந்து வைத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியளர்கள் அவரிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதில் அளித்தார்.

 ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்துக்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது  தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர்,   “எனக்கு அது பற்றி தெரியவில்லை. ஆளுநர் சார்பில் நான் பேச முடியாது. என்னைப் பொறுத்தவரை, இந்த ஆன்லைன் ரம்மிக்கு தடை என்பது காலத்தின் கட்டாயம். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த ஆன்லைன் ரம்மிக்கு தமிழ்நாடு அரசு தடையைக் கொண்டு வந்துபோதே, பாஜக அதனை வரவேற்றது. ஆளுநர் தரப்பில் வேறு ஏதாவது கருத்துக் கேட்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எனக்கு தெரியாது. அவர் சார்பில் நான் பேச முடியாது. பாஜக சார்பில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு முழு ஆதரவு உள்ளது” என்றார்.

சூர்யா சிவா, காயத்ரி ரகுராம் தொடர்பான கேள்விக்ளுக்கு பதில் அளித்த அண்ணாமலை, சூர்யா சிவா தகாத முறையில் பேசியுள்ளார். அது தொடர்பாக இன்று மாலைக்குள் அறிக்கை கேட்கப்பட்டு இருப்பதாக கூறியவர், பாஜகவின் லட்சுமண ரேகையை மீறுவோர்மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றவர், காயத்ரி ரகுராம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என்று மறுத்தார். மேலும் தொடர்ந்து, தற்போதைய நடவடிக்கை ஆரம்ப கட்டம்தான் என்றவர், தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

 அதிமுக தனித்துப் போட்டி என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தேசிய ஜனநாயக கூட்டணியை பாஜகவின் நாடாளுமன்ற குழு உருவாக்கியது. கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்க வேண்டும். என்ன மாதிரியான தலைவர்கள் இருக்கவேண்டும் என்பதெல்லாம் அந்த குழுதான் முடிவு செய்தது. அந்த அடிப்படையில் கூட்டணியாக தொடர்ந்து கொண்டிருக்கிறோம். கட்சியின் மாநிலத் தலைவராக சொல்கிறேன், அதிமுக உடனான கூட்டணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டு கட்சிகளும் ஒன்றாக இருக்கிறோம். இதில் எந்த பிரச்சினையும் கிடையாது. பிரதமர் வருகையின்போது, அதிமுகவிலிருந்து வந்து பார்க்கின்றனர். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரிவு உபசார விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அதேநேரத்தில் 2024 எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது என்றவர்,

2024 பாராளுமன்ற தேர்தலில், மாநிலத் தலைவராக பாஜக இவ்வளவு இடங்களில் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது என்னுடைய தனிப்பட்ட கருத்து. கட்சி வளர்ந்துள்ளது, கட்சிக்கு இவ்வளவு வாக்குகள் இருக்கிறது. இத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்ற எங்களது கட்சி சார்ந்த கருத்துகளை எல்லாம் கூறுவோம். கூட்டணி எப்படி அமையும், எத்தனை இடங்கள் கொடுப்பார்கள், கூட்டணியில் அனைவரையும் சேர்க்க முடியுமா என்பது குறித்தெல்லாம் மத்தியக் குழு முடிவு செய்வார்கள் என்றார்.  கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை. கூட்டணியில் தொடர்கிறோம். ஆரோக்கியமான முறையில் சென்று கொண்டிருக்கிறது. பாஜகவின் வளர்ச்சி என்பது அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்கள் உள்ளன. எத்தனை இடங்களில் போட்டி என்பதை முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது” என்று அவர் கூறினார்.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article