சென்னை: கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபை கூட்டத்தொடர்களின் போது, உறுப்பினர்களிடம் இருந்து 1,30, 572 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபையானது 2016ம் ஆண்டு மே 25ம் தேதி தொடங்கி, 2020ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி நிறைவு பெற்றது. .கடந்த 5 ஆண்டுகளில் நிகழ்ந்த சட்டசபை நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
அதன் விவரம் வருமாறு: கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபையில் உறுப்பினர்களிடம் இருந்து 1,30, 572 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதுவரை 10 கூட்டத் தொடர்கள் நடைபெற்று, 167 நாட்கள் அவை கூடியது. அந்த வகையில் 858 மணிநேரம் சட்டசபை நடைபெற்றுள்ளது. முதலமைச்சர் துறைகள் தொடர்பாக அவையில் பதிலளித்த நேரம் 9 மணி 16 நிமிடங்கள் ஆகும்.
மற்ற துறைகள் தொடர்பாகவும், எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளுக்கு பதிலளிக்கவும், 362 முறை குறுக்கிட்டு 6 மணி 16 நிமிடங்கள் பதிலளித்து உள்ளார். 5 ஆண்டுகளில் எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்து 572 கேள்விகள் வரப்பெற்றன. அவற்றில் 82 ஆயிரத்து 506 கேள்விகள் அவையில் கேட்க அனுமதிக்கப்பட்டன.
அதிக கேள்விகளுக்கு அதாவது 103 கேள்விகளுக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்துள்ளார். மொத்தம் 39 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அவற்றில் 12 தீர்மானங்களுக்கு முதலமைச்சர் பதிலளித்தார். 245 முக்கிய பிரச்சினைகள் அவையில் எழுப்பப்பட்டன. அதில் 60 பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் பதிலளித்தார்.
210 சட்ட மசோதாக்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டு, 205 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. 7 அரசினர் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. விதி எண் 110ன் கீழ் 177 அறிக்கைகளை முதலமைச்சர் படித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் சட்டசபைக்கு 18 எம்.எல்.ஏ.க்கள் நாள் தவறாமல் வந்துள்ளனர். முதலமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் வருகை பதிவேட்டில் கையெழுத்திடாவிட்டாலும் அனைத்து நாட்களிலும் அவைக்கு வந்து, கூட்டம் தொடங்கி முடியும் வரை பங்காற்றி உள்ளனர். அவையில் 89 ஆயிரத்து 731 பேர் பார்வையாளர்களாக வந்துள்ளனர். அவர்களில் 13 ஆயிரத்து 179 பேர் பெண்கள் ஆவர்.