அதிகரித்துள்ளதா மோடி அலை? : உண்மை என்ன?

பரபரப்பாய் நடந்து  முடிந்த ஐந்து மாநிலத் (பஞ்சாப், கோவா, மணிப்பூர், உ.பி., உத்தரகாண்ட்) தேர்தல்களின் முடிவு வெளியாகியுள்ளது.

இரண்டு மாநிலங்களில் மட்டும் தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது பாஜக.
மூன்று மாநிலங்களில் அதிக இடங்களை வென்றக் கட்சியாக காங்கிரஸ் திகழ்கின்றது.
பஞ்சாபில் தனிபெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கின்றது.

கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரசை ஆட்சியமைக்க அழைக்காமல் ஆளுநர்கள் இரண்டாம் இடம் பெற்ற பாஜவை ஆட்சியமைக்க அழைத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி வருகின்றனர்.

கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசை வெளியேற்ற மக்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த  வெற்றி என்பது கார்ப்பரேட்டுகளும் மீடியாக்களும் உருவாக்கிய 2ஜி ஊழல் குற்றச் சாட்டு, அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு போராட்டம்  ஆகியவை மக்களை காங்கிரசுக்கு எதிராக திருப்பின. அதனை மோடி அலை என மீடியாக்கள் முன்னிருத்தின. ஆனால் அதன் பிறகு டெல்லி மற்றும் பீகாரில்  மோடி அலை எடுபடவில்லை.

தற்போது, இந்தத் 5  மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பதும் மாநில பிரச்சனைகளின் அடிப்படையிலேயே ஆளும்கட்சிக்கு எதிராக தீர்மானிக்கப்பட்டுள்ளது. நடுவண் அரசின் ஆட்சிக்கான மக்கள் உணர்வாகத் தெரியவில்லை. தேர்தல் நடந்த அனைத்து மாநிலங்களிலும் மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்பியுள்ளதாகத் தெரிகிறது.

ஒவ்வொரு தேர்தல் வந்த பின்பும், சதிவிகித அடிப்படையில் தங்களின் வாக்குகளைக் கூறும் பா.ஜ.க, இந்த முறை அதைப் பற்றி வாய்திறக்கவில்லை. நாம் அதனைக் பார்ப்போமா?
பஞ்சாப் :
பஞ்சாப் மாநிலத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 9% வாக்குகள் வாங்கிய பாஜக , இந்தத் தேர்தலில் 5% மட்டுமே வாங்கியது. அதாவது பஞ்சாபில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 4% குறைந்துள்ளது!
பஞ்சாபில் ஆளும்கட்சியுடன் கூட்டணியிட்டு போட்டியிட்ட பா.ஜ.க. இங்கு மண்ணைக் கவ்வியுள்ளது.


கோவா:
கோவா மாநிலத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 54% வாக்குகள் வாங்கிய பாஜக, இந்தத் தேர்தலில் 33% மட்டுமே வாங்கியது. அதாவது கோவாவில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 19% குறைந்துள்ளது.
இங்கு ஆளும்கட்சியாய் இருந்த பாஜகவின் முதல் அமைச்சர் மற்றும் 8 அமைச்சர்களை மக்கள் தோற்கடித்துள்ளனர். காங்கிரஸ் அதிக இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாய் உருவெடுத்துள்ளது. எனினும், இரண்டாம் இடத்தைப் பெற்ற பாஜக, மக்களின் தீர்ப்பை மதிக்காமல், வழக்கம்போல் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரான மனோகர் பாரீக்கரின் தலைமையின் கீழ் ஆட்சியமைத்துள்ளது.


உ.பி:
உத்தரப்பிரதேச மாநிலத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 42.6% வாக்குகள் வாங்கிய பாஜக , இந்தத் தேர்தலில் 39.6% மட்டுமே வாங்கியது. அதாவது உ.பி.யில் பாஜகவின் வாக்கு சதவிகிதம் 3% குறைந்துள்ளது!!
மத ரீதியாக மக்களைப் பிளவுப்படுத்தி பிரச்சாரம் செய்து பாஜக இங்குத் தனிப்பெரும் கட்சியாய் உருவெடுத்துள்ளது. ஆனால், முதல்வராக யாரைத் தேர்வு செய்வது என்பஹ்டில் குழப்பம் நீடிக்கின்றது.

உத்தரகாண்ட்:
உத்தரகாண்ட் மாநிலத்தில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் 56% வாக்குகள் பெற்ற பாஜக , தற்போது 46% மட்டுமே பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதாவது உத்தரகாண்டில் பாஜகவின் வாக்கு சதவிகிதம்10% குறைந்துள்ளது!

உண்மை நிலை இவ்வாறு இருக்க, மத்திய ஊடகங்கள் மற்றும் பாஜக ஆதரவு நாளிதழ்கள், மோடிதான் பாஜகவிற்கு வெற்றியைத் தேடித் தந்தது போல் விளம்பரப்படுத்துகின்றன.

தற்போது கூறுங்கள், மோடி அலை வீரியமடைந்துள்ளதா ? சரிந்துள்ளதா ?

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், பாஜகவின் பொய்ப் பிரச்சாரங்களைச் சமாளிப்பதோடில்லாமல் மக்களின் நம்பிக்கையைப் பெற்று தேர்தலில் வெற்றியை ஈட்ட புதிய வியூகம் அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


English Summary
In 4 out of 5 states where state elections were held, the vote percentage of BJP has reduced as high as 20% in comparison to 2014 results, thus indication the modi wave is diminishing