புதுடெல்லி: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையானது, முதலீடு செய்வதற்கான கவர்ச்சிகரமான நாடாக இந்தியாவை மாற்றியுள்ளதாக கூறியுள்ளார் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ்.

ரிசர்வ் வங்கி கவர்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “இந்தப் பொருளாதார சூழலில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு என்பது ஒரு துணிச்சலான நடவடிக்கை. இதன்மூலம், வெளிநாட்டு முதலீடுகளை அதிகம் ஈர்க்கவல்ல கவர்ச்சிகரமான நாடாக இந்தியா மாறியுள்ளது.

உள்நாட்டு முதலீட்டாளர்களை எடுத்துக்கொண்டால் இந்த நடவடிக்கையால் அவர்களிடம் அதிக பணம் இருக்கும். எனவே, அவற்றை அவர்கள் மூலதன செலவிற்கு பயன்படுத்துவார்கள்.

சிலர் தங்களின் கடனையும் அடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தங்களின் நிறுவன நிதிநிலை அறிக்கைக்கும் பலம் சேர்த்துக்கொள்ள முடியும். நான் நிதியமைச்சரை சந்தித்தது என்பது நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு முன்னதாக வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான்” என்றார் சக்திகாந்த தாஸ்.