புதுடெல்லி: நிலக்கரி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவானது, 8 ஒருங்கிணைந்த தொழில்துறைகளின் வளர்ச்சியில் 2.1% என்கிற அளவிற்கு வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டதாக அரசின் தரவு விபரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த 8 ஒருங்கிணைந்த தொழில்துறை என்பது நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் போன்றவைகளை உள்ளடக்கும். கடந்தாண்டு ஜுலையில் இத்துறைகள் 7.3% அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டன.
தொழில்துறை உற்பத்தியில், ஒட்டுமொத்தமாக 40.27% அளவை மேற்கண்ட ஒருங்கிணைந்த தொழில்துறைகள் கொண்டுள்ளன.
மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்ட மாதத்தில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்பு பொருட்கள் ஆகியவை சார்ந்த உற்பத்தியில் எதிர்மறை வளர்ச்சி அடையாளம் காணப்பட்டது.
கடந்த ஏப்ரல் – ஜுலை மாத காலகட்டத்தில், குறிப்பிட்ட 8 ஒருங்கிணைந்த தொழில்துறைகளின் வளர்ச்சி விகிதம் 3%க்கு குறைந்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் ஒப்பிடும்போது அவற்றின் வளர்ச்சி 5.9% என்பதாக இருந்தது.