அழகி வாக்குமூலம்! அச்சத்தில் தமிழகப் புள்ளிகள்!

Must read

செம்மரக் கடத்தல்  விவகாரத்தில்  கைது செய்யப்பட்ட  மாடலிங் அழகியும் விமானப் பணிப்பெண்ணுமான  சங்கீதா அளித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதையடுத்து அந்த புள்ளிகள் அச்சத்தில் உறைந்துகிடக்கிறார்கள்.

கொல்கத்தாவைச் சேர்ந்த சங்கீதா சாட்டர்ஜி மாடலிங் செய்து வருவதுடன் விமானப்பணிப்பெண்ணாகவும் இருக்கிறார். இவர்  செம்மரக் கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.

செம்மரத்தை வெட்டுவதாகச் சொல்லி, தமிழ்நாட்டின் வட மாவட்டங்களைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளை ஆந்தி போலீசார் சுட்டுக்கொல்லும் நிலையில், சங்கீதா மட்டும் எந்தவித சிக்கலும் இன்றி செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தார்.

சங்கீதா மீது சந்தேகம் கொண்டு, போலீசார் அவரைப் பிடிக்க முயற்சிக்கும்போதெல்லாம், முன்னதாகவே தகவல் தெரிந்து தப்பி விடுவார். இப்படி பல வருடங்களாக காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துக்கொண்டிருந்த சங்கீதாவை, ஆந்திராவின் சித்தூர் போலீசார் கொல்கத்தாவில்  கடந்த 28ம் தேதி கைது செய்தனர்.

சித்தூர் சிறையில் தற்போது அடைக்கப்பட்டிருக்கும் சங்கீதா, போலீசாரின் விசாரணையில் பல  அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

செம்மர கடத்தல் தொழிலில் நீண்ட அனுபவம் கொண்ட சென்னையைச் சேர்ந்த லட்சுமணனை, சங்கீதா இரண்டாம்  திருமணம் செய்துகொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் தமிழ்நாடு,  ஆந்திரா, கர்நாடகா,  மேற்குவங்காளம்  ஆகிய மாநிலங்களில் தனது நெட் ஒர்க்கை வைத்திருக்கும்  சங்கீதா, மேலும் பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த செம்மரக் கடத்தல் புள்ளிகளை விசாரிக்க ஆந்திர போலீஸ் முடிவு செய்துள்ளது.

தேசிய கட்சி ஒன்றில் முக்கிய புள்ளியாக வலம் வந்த ஒருவர், தென் மாவட்ட மாஜி ஒருவரின் பினாமி ஆகியோர் உட்பட பலர் விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட புள்ளிகள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

விரைவில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

More articles

Latest article