சென்னை: கடந்த 4 நாட்களாக சென்னை மக்களை மிரட்டி வந்த ஃபெஞ்சல் புயல் இன்று மதியம் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூறாவளியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது
வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. தற்போது இந்த புயலானது சென்னையில் இருந்து தலா 190 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது, வடக்கு வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது, சென்னையை அடுத்த மாமல்லபுரம் காரைக்கால் இடையே இன்று கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துஉள்ளது.
புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள், சட்டப் பல்கலைக்கழக தேர்வுகள் உள்பட இன்று நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இதையடுத்து சென்னை உள்பட புயல் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுஉள்ளது. கடற்கரை சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. மென்பொருள் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.