சென்னை: தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் கோவையில் கைது செய்யப்பட்ட  4 பேருக்கு 10 நாட்கள் என்ஐஏ காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2022ம்ஆண்டு கோவையில் நடைபெற்ற கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்த நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடக மற்றும் தெலங்கானா என பல  இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

கோவையில் நடைபெற்ற சோதனையின்போது கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, கோவை அரபிக் கல்லூரியில் படித்த சிலர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஆள் சேர்த்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு சென்று சோதனை நடத்தினர். மேலும் பல இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது,

இதைத்தொடர்ந்து கோவையில் சிலர் கைது செய்யப்பட்டனர்.  கோவையில் கைது செய்யப்பட்ட,  சையது அப்துல் ரகுமான் (53), இர்ஷாத் (32), முகமது உசேன் (38), ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஜமீல் பாட்சா உமரி (55), ஆகிய நான்கு பேரை கடந்த ஆண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர்களை 10 நாட்கள் என்ஐஏ காவலில் விசாரிக்க தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. இதையடுத்து 4 பேரிடமும் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களை சேர்த்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த பிப்வரி மாதம் 2ந்தேதி (பிப்2, 2024) அன்று என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோவை அரபிக் கல்லூரியில் அரபு மொழி சொல்லி தருவதாகக் கூறி இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் ஆட்சேர்க்கும் முயற்சி நடைபெற்றுள்ளதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

2002-ல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில் நடத்தப்பட்ட கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாகவும், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்ப்பு விவகாரம் தொடர்பாகவும் தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளபட 21 இடங்களில் கடந்த சனிக்கிழமை தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது இந்த சோதனையைத் தொடர்ந்து தீவிரவாத எதிர்ப்பு மற்றும் ஆட்சேர்ப்பு வழக்கு தொடர்பாக 4 பேரை தீவிரவாத தடுப்பு அமைப்பான தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது. அந்த இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான மின்னணு சாதனங்கள், பொருள்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 6 மடிக்கணினிகள், 25 மொபைல் போன்கள், 34 சிம்கார்டுகள், 6 எஸ்.டி. கார்டுகள், 3 ஹார்டு டிஸ்க்குகள் உள்ளிட்டவை அதில் அடங்கும்.

சென்னை அரபிக் கல்லூரி, கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடைய 11 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. தீவிரவாத கொள்கைகளை அரபு மொழி வகுப்புகள் மூலம் இளைஞர்களிடம் புகுத்தி அவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் அரபிக் கற்றுக்கொடுப்பது போல், ஆனால் அரபு வகுப்புகளை தவிர்த்து, சமூக வலைதளங்களான வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் தீவிரவாத செயலுக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சியும் நடைபெற்றது.

வகுப்புகள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்து கிலாபத் மற்றும் ஐ.எஸ்.ஐஎஸ். சித்தாந்தங்களை அந்த இளைஞர்களுக்கு அவர்கள் வழங்க முயன்றுள்ளனர் எனவும் தேசிய புலனாய்வு முகமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயரம் போன்ற இந்தியாவின் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு விரோதமாக ஆட்களை சேர்க்க முயன்றதும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

2022 அக்டோபரில் நடந்த கோவை கார் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரும் கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்றும் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக மேலும் 10 இடங்களில் என்.ஐ.ஏ. குழுக்கள் நேற்று முன் தினம் ஒரே நேரத்தில் சோதனை செய்தனர். கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்களுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் விரிவான சோதனை நடத்தப்பட்டது.

கடந்த 2019-ம் ஆண்டு, கொழும்புவில் தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில், 250 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்திய இலங்கை தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிமை கோவையில் கைதானவர்கள் பின்பற்றி வந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் கைது செய்யப்பட்டவர்களில் 3 பேர் சென்னை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களில் ஜமீல் பாஷா உமாரி என்பவர் அடிப்படைவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிக்க கல்லூரியில் சேர்ந்ததாக என்.ஐ.ஏ. தெரவித்துள்ளது. அவர் கிலாபத் சித்தாந்தத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மௌலவி ஹூசைன் ஃபைசி என்கிற முகமது ஹூசைன் ஃபைசி மற்றும் இர்ஷாத் ஆகியோர் சென்னை ஜமீல் அரபிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள். மேலும் இவர்கள் 3 பேரும் சென்னை அரபிக் கல்லூரியை கோவை அரபிக் கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்வதற்கு காரணமாக இருந்தவர்கள். சோதனையை தொடர்ந்து 4-வதாக கைது செய்யப்பட்ட சையத் அப்துர் ரஹ்மான் உமரி ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய குற்றவியல் இலக்கியங்களையும் வைத்திருந்ததாகவும், கோவை கார் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொள்கைகளை ரகசியமாக பிரச்சாரம் செய்து வந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவாக ஆட்சேர்ப்பு விவகாரம் தொடர்பாகவும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் என்.ஐ. ஏ. தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை என்ஐஏ காவலுக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.