டெல்லி: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கும் திட்டமான ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியான இன்று நாடு முழுவதும் 75ஆயிரம் பேருக்கு பணி நிமயன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்படும் ரோஜ்கர் மேளா என்று பணி தொடர்பான திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். விடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று, அரசு வேலை வாய்ப்புப் பெற்றவர்களிடையே உரையாற்றி வருகிறார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து, 50 மத்திய அமைச்சர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, சுமார் 20,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். சண்டிகரில் நடைபெற்ற ரோஸ்கர் மேளா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நியமனக் கடிதங்களை வழங்கினார்
சென்னையில், இந்த திட்டத்தின் கீழ் அரசுப் பணியில் இணைந்தவர்கள், அயனாவரத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளனர்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பணியாணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் பங்கேற்பவர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கான பணிநியமன ஆணைகள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலமாக அனுப்பிவைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் போபாலில் நடைபெற்ற ரோஸ்கர் மேளா நிகழ்ச்சியில் நியமனம் பெற்றவர்களுக்கு யூனியன் மினிஸ்டர் ஜோதிராதித்ய சிந்தியா நியமனக் கடிதங்களை வழங்கினார். கேரளாவில் மத்திய இணையமைச்சர் ராஜூவ் சந்திரசேகரும் கலந்துக்கொண்டு பணி ஆணைகளை வழங்கினர்.
நியமனம் பெற்றவர்கள், மிகுந்த சந்தோஷத்துடன் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்னர். இரண்டு நியமனம் பெற்ற சஞ்சல் & ஆயுஷ் கூறும்போது, “நாங்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம். இது பிரதமரின் பரிசு. தீபாவளிக்கு முன் எங்களின் ஆஃபர் லெட்டர் கிடைத்துள்ளது, அது மிகவும் நன்றாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் வகையில் நியமன நடைமுறையை தொடங்க பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அறிவுறுத்தியிருந்தாா். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமா் மோடி தொடா்ந்து உறுதிப்பாட்டுடன் செயலாற்றி வரும் நிலையில், அதை நோக்கிய முக்கிய நகா்வாக இந்நிகழ்வு இருக்கும் என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்திருந்தது. அதன்படி, நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் தோ்வு செய்யப்பட்டு, அரசின் குரூப் ஏ மற்றும் பி (அரசிதழ் பதிவு பணிகள்), குரூப் பி (அரசிதழ் பதிவு அல்லாத பணிகள்) மற்றும் குரூப் சி பணிகளில் நியமனம் பெறவுள்ளனா்.
நாட்டில் வேலையின்மை அதிகரித்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், மத்திய அரசு இந்த திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது. மத்திய ஆயுதப் படை வீரா்கள், உதவி-ஆய்வாளா்கள், காவலா்கள், சுருக்கெழுத்தா்கள், வருவான வரி ஆய்வாளா்கள் உள்ளிட்ட நியமனங்கள் இதில் அடங்கும். மத்திய பணியாளா் தோ்வாணையம், அரசு பணியாளா் தோ்வாணையம், ரயில்வே நியமன வாரியம் உள்ளிட்டவை மூலமாக நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமா் அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா இன்று உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். உலகின் பல பெரிய பொருளாதாரங்கள் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால் போராடிக்கொண்டிருக் கின்றன என்பது உண்மைதான். 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய நெருக்கடியின் பக்க விளைவுகள் 100 நாட்களில் நீங்காது என்றவர், தற்போது அதில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கிறோம் என்றார்.
சமீபத்திய ஆண்டுகளில், 8 கோடி பெண்கள் அரசாங்கத்தால் நிதியுதவி பெறும் சுயஉதவி குழுக்களில் சேர்ந்துள்ளனர் என்றும், பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் பயனாளிகளில் சுமார் 70% பெண்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார்.