வங்கி மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையாவின் சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வங்கி கடன் ரூ.9000 கோடி என்ற நிலையில் அதை விட அதிகமாக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது நியாய என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்றுவிட்டு அதனை திரும்ப செலுத்தாமல் வெள்நாட்டிற்கு தப்பி சென்று விட்டார். வங்கிகளில் குற்றச்சாட்டினால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விஜய் மல்லையா மீது வழக்கு தொடர்ந்தது. அவர் வங்கிக்கடன் பெற்று திரும்ப செலுத்தாது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாக லண்டனில் வசித்து வந்த விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி இந்தியா சார்பில் அங்குள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறுதி தீர்ப்பில் விஜய்மல்லையாவை மோசடிகாரர், பணமோசடி செய்துள்ளார் என குறிப்பிட்டு அவரை நாடு கடத்த உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே மல்லையா தொடர்பான குற்ற வழக்குகளை விசாரித்து வந்த மும்பை சிறப்பு நீதிமன்றம் அவரை பொருளாதார குற்றவாளியாக அறிவித்திருந்தது. மேலும், மல்லையா பொருதாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதையடுத்து விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள மல்லையா, “ தினமும் காலை எழுந்ததும் அதிகாரிகள் புதிதாக எனது சொத்துக்களை பறிமுதல் செய்ய காத்திருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தினமும் கடன் மீட்பு தீர்பாய அலுவரை சந்தித்து வருகிறேன் “ குறிப்பிட்டுள்ளார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட தனது சொத்துக்களின் மதிப்பு ரூ.13ஆயிரம் கோடியை தாண்டியுள்ளதாகவும் மல்லையா கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தான் கடன்பெற்ற வங்கிகளுக்கு வட்டியுடன் ரூ. 9 ஆயிரம் கோடி தரவேண்டியுள்ள நிலையில், தன்னுடைய ரூ. 13 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நியாயமா? எனவும், நீதி எங்கே? என்றும் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.