நெல்லை:
கல்லிடைகுறிச்சி கோவிலில் இருந்து திருடு போன நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கல்லிடைக்குறிச்சி றம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மக்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து கடந்த 1982ம் ஆண்டு நடராஜன் ஐம்பொன் சிலை திருடு போனது.
இந்த சிலையை, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமை யிலான அதிகாரிகள் கண்டுபிடித்து, ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு வந்தனர். அதையடுத்து, சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கொண்டு வரப்பட்டு, நீதிபதியின் ஒப்புதல் பெற்று 37 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், கல்லிடைக் குறிச்சி கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கொண்டு வந்தனர். அங்கு அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் சார்ந்த அறநிலையத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சப்பரத்தில் வைத்து அலங்கரிக்கப்பட்ட சிலை ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு வரப்பட்டு, மீண்டும் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும்வரவேற்பை பெற்றுள்ளது. பொதுமக்களும் பக்தி பரவசத்துடன் நடராஜரை வரவேற்றனர்.