டெல்லி:

ராதாபுரம் தொகுதியில் நடைபெறும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைக்கோரி, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கில்,  விசாரணையை ஜனவரிக்கு ஒத்தி வைத்துள்ளது உச்சநீதிமன்றம்.

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு  எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாகவும், தபால் ஓட்டுகள் எண்ணப்படவில்லை என்றும் வெறும் 49 வாக்குகளில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, ராதாபுரம் தொகுதியில் உள்ள, 19, 20 மற்றும் 21 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டுமென கோரி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின்போது, மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட மட்டும் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கின் சில விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த விசாரணை ஜனவரியில் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பான வழக்கை அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை விசாரிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை விடுத்தது. அதை உச்சநீதி மன்றம்  நிராகரித்ததுடன்,  இன்பத்துரையின் வழக்கு ஜனவரியில் விசாரணை நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.