சென்னை: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை  நடத்த வேண்டும் என தேமுக தலைவர் பிரேமலதா  விஜயகாந்த் கூறியுள்ளார்.

நடைபெற்ற முடிந்த மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயபிரபாகரன் களமிறங்கி இருந்தார். அவரை எதிர்த்து,  இந்தியா கூட்டணி சார்பாக திமுக ஆதரவுடன் காங்கிரஸ்  வேட்பாளர் மாணிக்கம் தாகூரும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், போட்டியிட்டனர்.

தேர்தல்வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி காலை வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்தார்.  இதனால் அவர் வெற்றிபெறும் என பொதுமக்களும், அரசியல் கட்சியினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால்,  இறுதியில் 3,80,877 வாக்குகள் பெற்ற விஜயபிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாப அறிவிக்கப்பட்டது. விஜயபிரபாகரன்  இரண்டாம் இடத்தை பெற்றார்.

இந்த நிலையில்,  இன்று சென்னையில்  உள்ள தேமுக தலைமை அலுவலகத்தில் தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடைபெற்றுள்ளதாகவும், வாக்கு எண்ணிகையின்போது,  2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது ஏன்? எனவும் கேள்வி எழுப்பிய  பிரேமலதா விஜயகாந்த். விருதுநகர் தொகுதியில், மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும்,  தேர்தலில் போட்டியிட்ட  மற்றவர்கள் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்றபோது விஜயபிரபாகரன் 4,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம்; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக கூறியதுடன், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றும் தெரிவித்தார்.