சென்னை: ‘டாஸ்மாக்’ கடையில், மது விற்பனைக்கு ரசீது கொடுக்கப்பட வேண்டும் என்றும், சில்லரை விற்பனை கடைகளில் மொத்தமாக மது விற்பனை செய்யக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில், நிர்ணயிக்கப்பட்ட விலையை கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குடி மகன்கள் புகார் வருகின்றனர். உதாரணமாக,  ஒரு குவாட்டர் பாட்டில் விலை ரூ.70 என்றால், அதை ரூ.80 வரை டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை செய்துவருகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும்,  டாஸ்மாக் மதுவின் விலை பட்டியலை ஒவ்வொரு கடையின் முன்பும் வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும்,  கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

இதையடுத்து, டாஸ்மாபக்  நிறுவனத்தின்  மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், அனைத்து மண்டல சிறப்பு பறக்கும் படை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

‘ஏற்கனவே அறிவுறுத்தியபடி ‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்கப்பட வேண்டும்.

மது விற்பனைக்கு பற்றுச்சீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

இந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை மாவட்ட மேலாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனை கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ .

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவியல் வழக்கு ஒன்றில் ‘டாஸ்மாக்’ கடைகளில் மொத்தமாக மதுபானங்களை வாங்கி விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது. அதன்படி,  மொத்தமாக விற்பனை செய்யும் ஊழியர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது குறித்து மாவட்ட மேலாளர்கள் ‘டாஸ்மாக்’ ஊழியர்களிடம் விளக்கமாக தெரிவித்து அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.