மும்பை: தற்போதைய கொரோனா முடக்கம் காரணமாக, மக்களை கவரும் வகையில், வீடுகளின் விலையில் 12% முதல் 20% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது ரியல் எஸ்டேட் துறை.

தற்போதைய பொருளாதார முடக்கம் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையும் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன. எனவே, மக்களை ஈர்ப்பதற்கு பல சலுகைகளை அறிவிக்கும் நிலைக்கு ரியல் எஸ்டேட் துறை தள்ளப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; உயர்ந்த விலைகொண்ட வீடுகளுக்கு (ரூ.1.6 கோடி முதல் ரூ.8 கோடி வரை) 20% வரை தள்ளுபடியும், நடுத்தர விலையுடைய வீடுகளுக்கு (ரூ.60 லட்சம் முதல் ரூ.1.6 கோடி வரை) 12% முதல் 15% வரையிலான தள்ளுபடியும் அறிவித்துள்ளது.

மேலும், குறைந்த விலையிலான வீடுகளுக்கு (ரூ.55 லட்சத்திற்கும் கீழ்), வேறுசில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அந்த விலையில் வீடுகளை வாங்குவோர் தாமதமாக பணம் செலுத்துதல் மற்றும் பேரம் பேசுதல் ஆகிய வசதிகளைப் பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.