தூத்துக்குடி:

தூத்துக்குடியில் மக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழப்பு மற்றும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கி சூடுக்கு அனுமதி அளித்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி நியமிக்கப்பட்டார்.

கடந்த 3 நாட்களாக பதற்றமாக காணப்படும் தூத்துக்கு நிலவரம் குறித்து ஆய்வு நடத்திய கலெக்டர் இன்று வணிகர்களை அழைத்து கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார். ஆனால் கறுப்பு கொடியுடன்தான் கடை திறக்கப்படும் என வணிகர்கள் தெரிவத்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர், எந்த கோரிக்கையாக இருந்தாலும் தன்னை எந்த நேரத்திலும் மக்கள் சந்திக்கலாம்.. நானும் சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

மேலும், தூத்துக்குடி நகரில் நாளைக்குள் கடைகளை திறக்க வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும்,  தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்பிவிட்டால் கடைகளை திறப்பதாக கூறி உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது ஆட்சியராக இருக்கும் சந்திப் நந்தூரி கலெக்டர் ஆவதற்கு  முன்பு எங்கிருந்தார் தெரியுமா?

இந்த ஆட்சியர் சந்திப் நந்தூரிதான் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர், செல்லூர் ராஜு,  வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் திட்டத்தை செயல்படுத்த முனைந்த குழுவில் உள்ள அதிகாரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.