சென்னை,
சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு விடும் நடிகர் கமலஹாசன் தற்போது பா.ஜ.கவுடன் கை கோர்க்கவும் தயார் என்று கூறி உள்ளார்.
நாட்டில் ஊழல் மிகுந்துள்ளதாகவும் அதை அகற்ற அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிய கமல், தற்போது அதற்காக தயாராகி வருகிறார். தான் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் பெயர், கொடி, சின்னம் போன்றவற்றை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல், நிர்வாக ரீதியாக தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் பாரதிய ஜனதா கட்சியுடனும் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக கூறி உள்ளார்.
மேலும், பாரதிய ஜனதா கட்சியின் வலதுசாரி கொள்கைகள் மட்டுமே தனக்கு அதிருப்தி அளிப்பதாகவும், ஆனால் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவானால் அக்கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் தனக்கு எந்த தயக்கம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன் என்றும், அரசியலில் ஈடுபடும் முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கவில்லை, நிதானமாக யோசித்தே முடிவு எடுத்திருக்கிறேன்.
மேலும், தான் தொடங்கப்போகும் கட்சிக்கு தேவையான கொடி, சின்னம் ஆகியவற்றை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சி தொடங்க இருப்பதாகவும் கூறி உள்ளார்.
ஊழல், நீட் போன்றவற்றில் மத்திய மாநில அரசுக்கு எதிராக கருத்துக்களை கூறி வந்த நிலையில் தற்போது அவர் தனது நிலையை மாற்றி இருப்பது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வந்த நடிகர் கமல், கடந்த வாரம்தான், டில்லியில் பாரதியஜனதாவை எதிர்த்து களத்தில் வந்து ஆட்சியை கைப்பற்றிய அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், கமலஹாசன் தனது நிலையை மாற்றியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் மறைமுக மிரட்டலுக்கு கமலஹாசன் பணிந்துவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.