டில்லி,
ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கூறி உள்ளார்.
சமீப காலமாக பாரதியஜனதாவினர் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றம் ஆகிய இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதன் காரணமாக தேர்தல் செலவுகள் வெகுவாக குறையும் என்றும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசும் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதி அதன் தரப்பு கருத்தை தெரிவிக்கும்படி கோரியிருந்தது.
இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி, ரவத் பாராளுமன்றத்துக்கும், சட்ட சபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்று அறிவித்துள்ளார்.
2019ம் ஆண்டு நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்தல் நடத்துவதற்கு தயாராக இருப்போம் என்றும கூறி உள்ளார்.
ம.பி.யில் இணையதளம் மூலம் வாக்காளர் சேர்க்கை நடைபெறும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ரவத்,
பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக தேர்தல் கமிஷன் தயாராக இருக்குமாறு மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
இதையடுத்து தேர்தல் கமிஷன் புதிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்குவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
ஏற்கனவே ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு ஆர்டர் கொடுத்து விட்டோம். மத்திய அரசு நிதி ஒதுக்கியதும் எந்திரங்கள் கிடைத்து விடும்.
அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 40 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை தேர்தல் கமிஷன் பெற்று விடும். அதன் பிறகு எந்த நேரத்திலும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் வகையில் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.