சென்னை: மேகதாது அணை கட்ட தயார் என கர்நாடக முதல்வர் சித்தராமையா சட்டமன்றத்தல் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது, தமிழக விவசாயிகளிடையே அதிர்வ்லைகளை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள காவிரி உரிமை மீட்புக் குழு , தஞ்சாவூரில் காவிரி ஆணைய தலைவர் உருவ பொம்மை எரித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
கர்நாடகத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 12-ந் தேதி தொடங்கியது.. நடப்பு ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறையை தன் வசம் வைத்துள்ள சித்தராமையா, இன்று காலை 10.15 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 14-வது பட்ஜெட்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ள சித்தராமையா, எப்போதும்போல தமிழ்நாட்டுக்கு எதிரான வன்மத்தையும் கக்கியுள்ளார். காவிரி பிரச்சினை, மேகதாது பிரச்சினை குறித்தும் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேகதாது பகுதியில் அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக கூறியவர், இதனால் பாதிக்கப்படும் விவசாயகிளுக்கு மற்ற பகுதிகளில் நிலம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், மேகதாது அணை கட்ட ஒரு தனி மண்டல குழு, இரண்டு துணை மண்டல குழுக்களை அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளதுடன், மத்தியஅரசு அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே உடனே அணை கட்டப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காவிரி உரிமை மீட்பு குழுவினர், மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி பெற சூழ்ச்சியாகச் செயல்படும் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேகதாது, காவிரி பிரச்சினையில், கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு, மத்திய பாஜக அரசு துணை நிற்பதாக குற்றம் சாட்டியதுடன், இந்த விவகாரத்தை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளவில்லை என்று கூறியும் முழக்கங்கள் எழுப்பிய காவிரி உரிமை பாதுகாப்பு குழுவினர், காவல் துறையினரின் பலத்த பாதுகாப்புக்கு இடையே, மறைத்து வைத்திருந்த காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தரின் உருவபொம்மையை எரித்து முழக்கங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் நிறைவேற்றினார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேக்கேதாட்டு அணை குறித்த பொருளை முன்வைத்தால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகக் கூறி, இதுவரை தடுத்து வந்த தமிழக அரசின் நீர்வளத் துறைச் செயலர் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டது ஏன்? என்ற விளக்கத்தை அளிக்கவில்லை.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி நீரை 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிப்பது மட்டுமே காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம். கர்நாடகம் புதிய அணையைக் கட்ட அனுமதி தரும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு இல்லை. இந்நிலையில் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு இதுவரை கண்டிக்கவில்லை. இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்காது. எனவே காவிரி ஆணையத் தலைவர் பதவியில் இருந்து எஸ்.கே. ஹல்தரை நீக்க வேண்டும். ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்” என தெரிவித்தார்.
போராட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளர் த. மணிமொழியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ப. ஜெகதீசன், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், தமிழ்த் தேசிய முன்னேற்ற கழகத் தலைவர் த.சு. கார்த்திகேயன், ஐஜேகே மேற்கு மாவட்டத் தலைவர் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழர் தேசியக் களத் தலைவர் ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு சாமி. கரிகாலன், துரை. இரமேசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.