உலகின் முதல்நிலை ஒட்டப்பந்தைய வீரர் உசேன் போல்ட், மீண்டும் ஒலிம்பிக்கில் இடம்பெற விருப்பம் தெரிவித்துள்ளார், ஆனால், இம்முறை ஒட்டப்பந்தயத்திற்குப் பதிலாக கிரிக்கெட் விளையாட்டில் களமிறங்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
ஜமைகாவைச் சேர்ந்த உசேன் போல்ட், பல ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்று, உலகின் சிறந்த ஓட்டப்பந்தய வீரராக தன்னை நிலைநிறுத்தினார். தற்போது அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், மீண்டும் களமிறங்கும் வாய்ப்பை அவர் முற்றிலும் மறுக்கவில்லை.

128 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்க்கப்படுகிறது. அந்தப் போட்டியில் ஜமைகா அணியும் பங்கேற்கவுள்ளது. அப்போது தன்னை அணியில் சேர அழைத்தால், விளையாடத் தயாராக இருப்பதாக போல்ட் தெரிவித்துள்ளார்.
தோஹா மாரத்தான் முன்னிட்டு Esquire இதழுக்கு அளித்த பேட்டியில்,
“நான் மகிழ்ச்சியாக ஓய்வில் இருக்கிறேன். நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடவில்லை. ஆனால் அழைத்தால், நிச்சயம் தயார்,” என்று கூறினார் போல்ட்.
ஏற்கனவே, இந்தியாவில் நடைபெற்ற ஒரு விளம்பர நிகழ்ச்சியிலும், “நான் ஸ்பிரிண்ட் வீரராக மாறாமல் இருந்திருந்தால், கண்டிப்பாக கிரிக்கெட் வீரனாக இருந்திருப்பேன்” என்று போல்ட் தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் கூறியதாவது, “என் அப்பா பெரிய கிரிக்கெட் ரசிகர். நான் வளர்ந்தபோது தெரிந்த விளையாட்டு கிரிக்கெட் தான். சிறிது கால்பந்து இருந்தாலும், முக்கியமாக கிரிக்கெட் தான்.”
பள்ளிக் காலத்தில் அவர் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். அப்போது அவரது கிரிக்கெட் பயிற்சியாளர், “நீ ஓட்டப்பந்தயத்தை முயற்சி செய்து பாரேன்” என்று சொன்னதால்தான், தடகளத்திற்குள் அவர் வந்ததாகவும் போல்ட் நினைவுகூர்ந்தார்.
“ஓடிப் பார்த்தேன், நன்றாக வந்தது. திறமை இருந்தது. அதனால் தொடர்ந்து அதையே தேர்ந்தெடுத்தேன்,” என்றார் அவர்.
8 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற உசேன் போல்ட், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் ஓட்டப்பந்தயத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
இப்போது 39 வயதாகும் அவர், 100 மீட்டர் (9.58 விநாடி), 200 மீட்டர் (19.19 விநாடி), 4×100 மீட்டர் ஆகிய உலக சாதனங்களை இன்னும் தக்க வைத்திருக்கிறார்.
[youtube-feed feed=1]