சென்னையில் நடைபெற உள்ள வான் சாகச நிகழ்ச்சிக்காக சென்னை மெரினா கடற்கரைக்குச் செல்லும் பல்வேறு முக்கிய சாலைகளில் நாளை காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.
பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் சொந்த வாகனங்களில் வரும் பொதுமக்களுக்கு என தனித்தனி வாகன நிறுத்துமிடங்களை அறிவித்துள்ள காவல்துறை இடவசதி காரணமாக காலை 9:30 மணிக்குள்ளாக வர அறிவுறுத்தியுள்ளனர்.
இந்திய விமானப்படை நிறுவன தினத்தின் 92வது ஆண்டையொட்டி விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
2003க்குப் பின் 21ஆண்டுகள் கழித்துச் சென்னையில் நடைபெற உள்ள இந்த சாகச நிகழ்ச்சி இம்முறை மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது.
இந்திய விமானப்படையின் சாகசங்களைக் காண பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்னை வரவுள்ளனர்.
நாளை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்காக சென்னை நகர் முழுவதும் பலத்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியைக் காண சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சுமார் 15 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நிகழ்வு லிம்கா சாதனை புத்தகத்திலும் இளம்பெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ள நிலையில் சென்னை நகரில் போக்குவரத்து மாற்றங்களை காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
முக்கிய விருந்தினர்கள், VIP & VVIP, பத்திரிகையாளர்களுக்கு தனித்தனி பாஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் ஆர்.கே. சாலையை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து மாற்றங்கள்
காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜர் சாலை, அண்ணாசாலை, சாந்தோம் ஹை ரோடு, ஆர்.கே. சாலை, கதீட்ரல் சாலை மற்றும் வாலாஜா சாலை ஆகிய சாலைகளில் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவானிமியூரில் இருந்து பாரிஸ் செல்லும் வாகனங்கள் அடையார் சிக்னல் அருகே காந்தி மண்டபம் வழியாக திரும்பி கிண்டியில் இருந்து அண்ணா சாலை வழியாக முத்துசாமி பாலத்தை அடைந்து பாரிஸ் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாரிஸ்ஸில் இருந்து திருவானிமியூர் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு வழியாக வரும் வாகனங்கள் மந்தைவெளி, ஆர்.ஏ.புரம், டிடிகே சாலை, ஆர்.கே. சாலை வழியாக அண்ணா சாலை செல்லும்.
பார்க்கிங் வசதிகள்
சாந்தோம் சாலை வழியாக நிகழ்ச்சியைக் காண செல்பவர்கள் :
CSI காதுகேளாதோர் பள்ளி
செயின்ட் பீட்ஸ் மேல்நிலைப் பள்ளி
புனித சாந்தோம் பள்ளி
செயின்ட் பீட்ஸ் மைதானம்
கதீட்ரல் ஆரம்ப பள்ளி
சாந்தோமில் உள்ள சமூகக் கூடம்
லூப் ரோடு
ஆகிய இடங்களிலும்,
ஆர்.கே. சாலை வழியாக வருபவர்கள் :
MRTS லைட் ஹவுஸ் சாலை
NKT பள்ளி
குயின் மேரி கல்லூரி (பத்திரிகை மற்றும் போலீஸ் வாகனங்கள்)
புனித எப்பாஸ் பள்ளி
ஆகிய இடங்களிலும்
வாலாஜா சாலை வழியாக வருபவர்கள் :
கலைவாணர் அரங்கம்
ஓமந்தூரார் மருத்துவ மைதானம் (பிரஸ் கிளப் சாலை நுழைவு)
விக்டோரியா விடுதி மைதானம்
ஆகிய இடங்களிலும்
அண்ணாசாலை சாலை வழியாக வருபவர்கள் :
தீவுத் திடல் மைதானம்
PWD மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்)
மன்றோ சிலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை
எம்ஆர்டிஎஸ் சிந்தாதிரிப்பேட்டை
ஆகிய இடங்களில் காலை 9:30 மணிக்குள்ளாக வந்து வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பாஸ் வைத்திருப்பவர்கள் :
பட்டினப்பாக்கம் சாலை (VIP & VVIP கார் பார்க்கிங்)
பிரசிடென்சி கல்லூரி
சுவாமி சிவானந்த சாலை
லேடி வெலிங்டன் கல்லூரி (ப்ளூ கலர் பாஸ் மட்டும்)
ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுவார்கள்.
மாநகர பேருந்து, மெட்ரோ அல்லது பறக்கும் ரயிலில் வரும் பொதுமக்களுக்கு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இருந்து வாலாஜா சாலையில் கடற்கரைக்கு செல்லும் முக்கிய இடம் வரையிலும், சிவானந்தா சாலையில் குறிப்பிட்ட தூரம் வரையிலும் சென்னை மாநகர பேருந்தின் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
அதேபோல் அண்ணா சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆர்.கே. சாலையில் கடற்கரைக்கு செல்லும் முக்கிய சந்திப்பு வரை இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.