வெகுகாலமாக நிலுவையில் கிடக்கும் வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகளை மறுநியமனம் செய்ய பரிந்துரை விடுக்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பின் மத்திய அரசு தற்பொழுது ஒப்புதல் அளித்துள்ளது.

law_law

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற முதலமைச்சர்கள் – தலைமை நீதிபதிகள் மாநாட்டில் வெகுகாலமாக தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைவில் விசாரித்து முடிக்கும் வழி வகைகள் குறித்து ஆராயப்பட்டது. தற்காலிக நடவடிக்கையாக நாடெங்கும் உயர்நீதிமன்றங்களில் உள்ள காலிப் பணியிடங்களில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை மீண்டும் நியமிக்க அம்மாநாடு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 224ஏ-இல் நீதிபதி பணியிட பற்றாகுறைகள் வரும் சூழலில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் நிலுவையில் கிடக்கும் வழக்குகளோடு சேர்ந்து இந்த பரிந்துரையும் கடந்த ஆறு மாதங்களாக நிலுவையில் கிடந்தது. மத்திய அரசின் இந்தத் தாமதத்தால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க உச்ச நீதிமன்றம் அண்மையில் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், பிரச்னைக்கு தாற்காலிகத் தீர்வுகாணும் நோக்கில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்படி முதலில் ஐந்து ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை தரப்பட்டு விசாரிக்கப்படும், அதன்பிறகு நான்கு ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் வழக்குகள் விசாரிக்கபடும் என்று தெரிகிறது.
24 உயர்நீதி மன்றங்களில் கிட்டத்தட்ட 450 நீதிபதிகளுக்கு பற்றாக்குறை இருக்கிறது. நீதிமன்றங்களில் இந்தியா முழுவதும் 3 கோடி வழக்குகள் தேங்கியுள்ளன.