பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்தல் நிதி பத்திரங்கள் வெளியிட இந்திய ரிசா்வ் வங்கி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் நோக்கில் தோதல் நிதிப் பத்திரங்கள் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1,00,000, ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பிலான தோதல் நிதிப் பத்திரங்கள், ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் மாதங்களின் முதல் 10 நாள்கள் மட்டும் பாரத ஸ்டேட் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்திட்டத்தின் படி நன்கொடை அளிப்பவரின் விவரங்கள், அதைப் பெறும் கட்சிகளுக்குத் தெரியவராது. வங்கிகள் மூலம் நன்கொடைகள் அளிக்கப்படுவதால், கருப்புப் பணத்தை நன்கொடையாக அளிப்பது தடுக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே வேளையில், தேர்தல் நிதி பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தேர்தல் நிதி பத்திரங்கள் எஸ்.பி.ஐ மூலம் வெளியிடுவது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன், “பல்வேறு கட்ட பரிசீலனை, ஆலோசனைகளுக்குப் பிறகுதான் எஸ்.பி.ஐ மூலம் தேர்தல் நிதி பத்திரங்களை வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2017 அக்டோபா் 11ம் தேதி நடத்தப்பட்ட ஆா்.பி.ஐ மத்திய வாரியக் கூட்டத்தில் எஸ்.பி.ஐ மூலம் தேர்தல் நிதி பத்திரங்களை வெளியிட ஒப்புதல் அளிக்கப்பட்டது. யாா் நிதி அளிக்கிறாா்கள் என்பதை அரசும் தெரிந்து கொள்ள முடியாது. இது தொடா்பாக ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்கு ஏதும் தொடுக்கப்பட்டால், நீதிமன்ற உத்தரவின் படி மட்டுமே நிதி வழங்கியது யாா் என்பது தெரியவரும்” என்று தெரிவித்தார்.