டெல்லி:

பணமதிப்பிறக்க அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 2 வாரங்கள் கழித்து தான் புதிய 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டது என ரிசர்வ் வங்கி தற்போது ஒப்புக் கொண்டுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார். இதனால் பணத்தை வங்கியில் செலுத்தவும், புதிய ரூபாய் நோட்டுக்களையும் பெற முடியாமல் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர்.

ஆரம்பத்தில் 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதனால் இந்த ரூபாயை வைத்துக் கொண்டு சில்லரை கிடைக்காமல் மக்கள் தவியாய் தவித்தனர். 500 ரூபாய் நோட்டு புதிதாக வெளியிடப்படும் என்று நவம்பர் 8ம் தேதி அன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறி, அதன் மாதிரியையும் காண்பித்தனர்.

ஆனால், புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்று மக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் புதிய 500 ரூபாயை, பணமதிப்பிறக்க அறிவிப்பு வெளியான 2 வாரங்கள் கழித்து தான் ரிசர்வ் வங்க அச்சடிக்கவே தொடங்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தை சேர்ந்த பராக் படேல் என்பவர் 2000 ரூபாய் நோட்டுக்கள் அதிகளவில் பிடிபடுவது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார். அந்த பதிலில்…

பாரதிய ரிசர்வ் வங்கியின் முத்ரன் அச்சகத்தில் நவம்பர் 23ம் தேதி தான் புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 22ம் தேதி புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி தொடங்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு விவகாரத்தில் 100 பேர் வரை இறந்துள்ளனர். பணமதிப்பிறக்கம் அமலில் இருந்த 50 நாட்களில் 70 புது உத்தரவுகளை ரிசர்வ் வங்கி பிறப்பித்தது.

பணமதிப்பிறக்க அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் அதை சமாளிக்க போதுமான முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்று அனைத்து எதிர்கட்சிகளும் புகார் கூறின. இது தற்போது உண்மை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.