இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ரவி சாஸ்திரிக்கு பக்க ஓட்ட சோதனை (Lateral Flow Test) மூலம் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறி இல்லாத ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு சுலபமாக தொற்று பரவும் என்பதால் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பவர்களுக்கு, கொரோனா பரிசோதனையில் உள்ள பல்வேறு சோதனைகளில் ஒன்றான, இந்த பக்க ஓட்ட சோதனையை மேற்கொள்கிறது இங்கிலாந்து சுகாதாரத்துறை.
மூன்றில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதில்லை என்பதால் கிரிக்கெட் அணியினருக்கு வாரத்தில் இரணாடு முறை அதாவது மூன்று அல்லது நான்கு நாள் இடைவெளியில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.
மகளிருக்கான கர்ப உறுதிப்படுத்தும் சோதனை போன்று, தொண்டைக்குழி அல்லது மூக்கின் வழியே எடுக்கப்படும் மாதிரியை உடனடியாக தெரிந்து கொள்ளும் சோதனைக் கருவி மூலம் தெரிந்து கொள்வதே இந்த பக்க ஓட்ட சோதனையின் சிறப்பு.
இந்த சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டாலும் ஆர்டிபிசிஆர் (RT-PCR) எனும் நேரடி சோதனை மூலம் உறுதி செய்துகொள்வதே நம்பகத்தன்மையானது என்பதால் ரவி சாஸ்திரிக்கு ஆர்டிபிசிஆர் சோதனை முடியும் வரை தனிமையில் இருக்க அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.