சென்னை: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 5-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்” என தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ர மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன், மாவட்ட தலைவர் ஆறுமுகம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் நியாய விலைக்கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தெ தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் , “நியாய விலைக்கடை பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் நியாய விலைக் கடைகளின் பணியாளர்கள் வரும் செப்டம்பர் 5-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்’’ என்றார்.
பணிப்பதிவேடு பராமரிப்பு, வங்கி மூலம் ஊதியம், “நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கு தேர்வு நிலை ஊதியமும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்பட வேண்டும், அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கழிப்பிட வசதி செய்து தரப்பட வேண்டும். பழுதடைந்த நியாய விலைக்கடைகளை சீரமைக்கவேண்டும்” உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்கத்தின்கீழ் செயல்படும் 35,000 நியாயவிலைக் கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொது விநியோகத் திட்டப் பொருள்களான அரிசி, சா்க்கரை, துவரம் பருப்பு ஆகியவற்றை பாக்கெட் மூலம் விநியோகிக்கும் திட்டம் முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில், தொகுதிக்கு தலா ஒரு நியாயவிலைக் கடை என சோதனை அடிப்படையில் இம்மாதம் முதல் தேதியிலிருந்து தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் உணவுப் பொருள்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதுடன், எடை குறைவின்றி விரைவாக குடும்ப அட்டைதாரா்களுக்கு கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டமானது, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.