சென்னை: கண்களை ஸ்கேன் செய்து அதன்மூலம் ரேசன் கார்டு தரவுகள் சரி பார்க்கப்பட்டு ரேஷன்பொருள் தர நடவக்கை எடுக்கப்பட இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடரின் 4வது நாள கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று பேரவை தொடங்கியதும், கேள்வி பதில் நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இன்றைய கேள்வி நேரத்தின்போது, ரேசன் கடை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறிய அமைச்சர் சக்கரபாணி, நியாய விலைக் கடைகளில் கைரேகை பதிவு மூலமாக பொருட்கள் பெற முடியவில்லை என்றால், கண் கருவிழி பதிவு மூலமாக பொருட்களை பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றவர், முதல்கட்டமாக, பரிசோதனை முயற்சியாக நகர்புறம், கிராமப்புறங்களில் தலா ஒரு ரேஷன் கடைகளில் இந்த முறை அமல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்ததுடன், நியாய வலைக்கடைகளில் வழங்கக்கூடிய பொருட்களை பாக்கெட் மூலமாக வழங்குவது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.