மும்பை: உடல்நலம் குன்றிய தனது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரைப் பார்ப்பதற்காக, மும்பையிலிருந்து புனேவுக்கு பயணம் செய்த ரத்தன் டாடாவின் செயல் சமூக வலைதளங்களில் பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, தனது அன்பு மற்றும் தயை கூர்ந்த நடவடிக்கைகளுக்காக பொதுவாக அறியப்படுபவர். அந்தவகையில், தற்போது மீண்டும் தனது ஒரு நடவடிக்கையின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது 83 வயதாகும் ரத்தன் டாடா, கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலமின்றி அவதியுறும் ஒரு முன்னாள் ஊழியரை பார்த்து நலம் விசாரிப்பதற்காக, மும்பையிலிருந்து புனேவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரத்தன் டாடாவின் இந்தப் பயணம் தொடர்பாக, யோகேஷ் தேசாய் என்பவர் மிகவும் பாராட்டியும் புகழ்ந்தும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.