சென்னை: கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சா போதைப்பொருளில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக காவல்துறையினர் கூறிய நிலையில்,  குற்றச்சாட்டு நிரூபிக்க முடியவில்லை என இரண்டு கஞ்சா வியாபாரிகளை நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், இதை மறுக்கும் தமிழக போலீசார், கஞ்சா வேட்டை என கூறி அவ்வப்போது   கஞ்சா கடத்தலையும், விற்பனையையும் போலீசார் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு, சென்னை மாட்டான்குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் 2பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பான வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கல் செய்த விசாரணை நடத்தி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், பறிமுதல் செய்யப்பட்ட 20 கிலோ கஞ்சாவில், 11கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி,  காவல்துறையினரால் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என கூறி, கஞ்சா வியாபாரிகள் 2 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினார்.