தினமும் ஊடகங்களில் தனது பெயர் அடிபட வேண்டும் என்பதால், சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இந்தி நடிகை கங்கனா ரணாவத்.
வலைத்தளத்தில் கங்கனா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது மும்பையில் உள்ள பந்த்ரா காவல்நிலையத்தில் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக பந்த்ரா காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகி அவர் விளக்கம் அளித்தார்.
பின்னர் சினிமா பட ஷுட்டிங்கில் கலந்து கொள்ள மத்தியபிரதேச மாநிலம் போபால் புறப்பட்டு சென்றார்.
போபாலில் கங்கனா செய்தியாளர்களை சந்தித்தார்.
மத்தியபிரதேச மாநில அரசு கொண்டு வந்துள்ள மதமாற்ற தடை சட்டம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கங்கனா “இந்த சட்டத்தை வரவேற்கிறேன். ஏமாற்று திருமணங்களை தடுக்க இந்த சட்டம் வகை செய்யும்” என்று தெரிவித்தார்.
“இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறதே?” என்ற வினாவும் அவர் முன் வைக்கப்பட்டது. இந்த கேள்வியை கேட்டதும் அவர் முகம் மாறியது.
“இந்தியாவில் பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகிறார்கள். இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் பொதுவெளியில் தூக்கில் போடப்படுகிறார்கள், இந்தியாவிலும் பாலியல் குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கில் தொங்க விட வேண்டும்” என கங்கனா ஆவேசமாக பதில் அளித்தார்.
– பா. பாரதி