“கேரள மாநிலத்தில் ‘மாஸ்டர்’ ரிலீஸ் ஆகாது” திரை அரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு…

Must read

 

ஊரடங்கு காரணமாக கேரள மாநிலத்தில் பத்து மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன.

இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க முதல்-அமைச்சர் பினராயி விஜயன் அனுமதி வழங்கினார்.

கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த காலத்தில் கணக்கிடப்பட்ட மின்சார கட்டணத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்த தியேட்டர் உரிமையாளர்கள், இந்த கோரிக்கை ஏற்கப்படாததால் தியேட்டர்களை திறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க கொச்சியில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

“தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தியேட்டர்களை திறப்பதில்லை” என இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளிவரும் நிலையில், அந்த படத்தின் கேரள மாநில விநியோக உரிமை பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது.

எனவே மாஸ்டர் படத்தை மட்டுமாவது திரையிட்டுக்கொள்ளலாமா? என இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதனை பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்கவில்லை.

இதனையடுத்து “தியேட்டர்களை இப்போதைக்கு திறப்பது இல்லை” என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

தியேட்டர்கள் திறக்கப்படாததால், ‘மாஸ்டர்’ திரைப்படத்தை நல்ல விலைக்கு வாங்கிய கேரள விநியோகஸ்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

– பா. பாரதி

More articles

Latest article