நிர்வாண படத்தில் தோன்றியதன் மூலம் பெண்களை இழிவுபடுத்தியதாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நியூயார்க்கில் வெளியாகும் இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்காக ரன்வீர் சிங் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.
பத்மாவதி, சூர்யவன்ஷி, 83 உள்ளிட்ட படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரின் இந்த நிர்வாண கோலத்துக்கு ஆதரவாக தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் லைக்குகளை வழங்கியிருந்தனர். இதில் விஷ்ணு விஷால் அதேபோல் அரை நிர்வாணமாக படங்களையும் வெளியிட்டிருந்தார்.
அதேபோல், ரன்வீர் சிங்குக்கு எதிர்ப்பும் கிளம்பியது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் அவருக்காக ஆடைகளை அந்த ஊர் மக்களிடம் இருந்து சேகரித்து அனுப்ப உள்ளது.
இந்த நிலையில், அபிஷேக் சௌபே என்பவர் நடத்தும் தொண்டு நிறுவனம் சார்பில் அவரது மனைவியும் வழக்கறிஞருமான வேதிகா சௌபே மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது புகாரளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் ரன்வீர் மீது பெண்களை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபட்டதாக ஐபிசி 292, 293 மற்றும் 509 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67(A) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.