கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவி ஏற்றார். அவருக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ரணில் இலங்கையின் 8வது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், மக்களின் எழுச்சிமிக போராட்டம் காரணமாக, பிரதமர், அதிபர் உள்பட அனைவரும் தங்களது பதவகிளை ராஜினாமா செய்துவிட்டு ஒடிய நிலையில், புதிய அதிபர் தேர்வு நடைபெற்றது. இதில் 3 பேர் களத்தில் நின்ற நிலையில் அதிக வாக்குகள் பெற்று ரணில் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இன்று நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார். இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கை மக்கள் ரணிலுக்கு எதிராகவும் போராடி வரும் நிலையில், மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். ரணிலுக்கு எதிராக தற்போதும் போராட்டக்காரர்கள் அமைதியான வழியில் போராடி வருவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
முன்னதாக நேற்று இலங்கை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 225 எம்பிக்களில், 223 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த எம்பி சமன்பிரியா ஹெராத் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் குளுகோஸ் இறக்கப்பட்டுக் கொண்டு இருந்த நிலையில், அப்படியே பார்லிமென்ட் வந்திருந்து வாக்கு அளித்தார். அவருடன் கையில் குளுகோஸ் பாட்டிலும் கொண்டு வந்து இருந்தனர். இவரை எதிர்த்து போட்டியிட்ட டலஸ் அழகபெரும 83 வாக்குகளும், அனுரா திசநாயக்க 3 வாக்குகளும் பெற்று இருந்தனர். நான்கு வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரணில் விக்ரமசிங்கே 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் நீடிப்பார். துவக்கத்தில் இருந்தே இவர் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது. ஆளுங்கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். ரணிலுக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடந்து வருவதால் ஒரு வாரத்திற்கு பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.