கொழும்பு: இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர் கோத்தபய ராஜபக்சே வென்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசா தோல்வி அடைந்தார். அதனை தொடர்ந்து, கோத்தபய அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இந் நிலையில், தமது பிறந்த நாளையொட்டி கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள்  அதிபர் மகிந்த ராஜபக்சே கலந்து கொண்டார். அதன் பிறகு  பேட்டியளித்த அவர், அதிபரும், மந்திரிசபையும் ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வேண்டும். மக்கள் தீர்ப்பை அவர் ஏற்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலகல் கடிதத்தை அதிபருக்கு அனுப்பி இருப்பதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்து உள்ளார்.

இதனிடையே, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அலரி மாளிகையில் சந்திக்கவுள்ளனர். சந்திப்பின்போது தங்களது பதவிகளிலிருந்து ராஜினாமா செய்து அரசாங்கத்தை புதிய அதிபரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிகிறது.