கோயம்முத்தூர்: கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடந்த கூட்டத்தில் கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மேயருக்கான மறைமுக தேர்தலில், மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர் உடல்நலம் மற்றும் சொந்த காரணங்களுக்கு மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் கட்சி தலைமையின் உத்தரவின் பேரில் அவர் ராஜினாமா செய்ததாக தகவல்கள் பரவின. முன்னதாக, முன்னாள் மேயர் கல்பனாவுக்கும், மற்ற திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. மாநகராட்சி நிர்வாகத்தில் கல்பனாவின் கணவரின் தலையீடு இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் கல்பனாவின் ராஜினாமா செய்ய திமுக தலைமையினால் அறிவுறுத்தப்பட்டார். இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து, கோவை மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 25ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி (நாளை) , மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.
இந்த நிலையில், மேயர் பதவியை பிடிக்க திமுக கவுன்சிலர்களிடையே கடுமையான போட்டி நிலவியது. 27வது வார்டு கவுன்சிலர் அம்பிகா, 29ஆவது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, 34 ஆவது வார்டு கவுன்சிலர் மாலதி, 36ஆவது வார்டு கவுன்சிலர் தெய்வானை, 46ஆவது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, 63ஆவது வார்டு கவுன்சிலர் சாந்தி ஆகியோர் மேயர் பதவியை பிடிக்க கோதாவில் குதித்தனர்.
இதைத்தொடர்ந்து போட்டியின்றி மேயரை தேர்ந்தெடுக்க எண்ணிய திமுக தலைமை, அதற்காக அமைச்சர் நேரு உள்பட மூத்த தலைவர்களை கோவைக்கு அனுப்பி பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, கோவை அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அமைச்சர் கே.என். நேரு மற்றும் முத்துசாமி தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தலைமை கழகத்தின் முடிவின் அடிப்படையில் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டு, அவர் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நாளை, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் காலை 10.30 மணிக்கு மேயர் பதவிக்கு வார்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
கோவை மாநகர மேயராக தேர்வு செய்யப்பட உள்ள ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் 29ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார்.