கிருஷ்ணகிரி:
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல இடங்களில் ஆட்டுச்சந்தை களைக்கட்டி உள்ளது. கிருஷ்ணகிரி ஆட்டுச்சந்தையில் மட்டும் 1.50 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்லாமியர்களின் ஈத் பண்டிகையான ரம்ஜான் ஜூன் மாதம் 5 அல்லது 6ந்தேதி கொண்டாடப் பட உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஆட்டுச்சந்தை களை கட்டி உள்ளது. ஆடுகள் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள ஆட்டுச் சந்தையில், ஆடுகள் நல்ல விலை போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அங்கு மட்டும் ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி அடுத்துள்ள குந்தாரப்பள்ளியில் நடைபெறும் கால்நடை விற்பனை சந்தைக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு, குரும்பை ஆடுகள் என மொத்தம் 10,000 ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. அவற்றை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச்செல்கின்றனர்.