சென்னை:

ஜூன் 3ந்தேதி கருணாநிதி பிறந்தநாளையொட்டி சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு திமுக ஏற்பாடு செய்து வருகிறது. இதில்  திமுக தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் 3-ந் தேதி நடைபெறும் மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கூடிடுவோம் என்று கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தி.மு.க. வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனைமிகு வெற்றியைப்பெற்ற அந்த நன்னாளாம் மே 23-ந் தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா, தலைவர் கருணாநிதியின் சிலையின் கீழ் நின்று, மகத்தான வெற்றிக்கு நன்றி தெரிவித்தபோது, ‘‘இந்த வெற்றியைக் காண, தலைவர் கருணாநிதி இல்லையே’’ என்ற எனது இதயத்தின் ஏக்கத்தை வெளிப்படுத்தினேன்.

அப்போது என் நா தழுதழுத்தது. உடல் நடுக்குற்றது. எதிரில் நின்றிருந்த கட்சி தொண்டர்கள் தந்த ஊக்கமும் உற்சாக முழக்கமும் என்னை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததுடன், தலைவர் கருணாநிதி நம்மிடையே இல்லாதபடி இயற்கை சதி செய்துவிட்டாலும், அவர் வகுத்துத் தந்த கொள்கைப் பாதையில் பயணித்துதானே, இந்த வெற்றியை ஈட்டியிருக்கிறோம் என்கிற ஆறுதலுடன், தி.மு.க. பெற்றுள்ள மகத்தான வெற்றியைத் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன் எனத் தெரிவித்தேன்.

இந்திய அரசியலில் ஜனநாயகத்திற்கும், சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும் ஆபத்து உருவானபோதெல்லாம் அதனைக் கட்டிக்காப்பதில் மூத்த தலைவராகவும் விளங்கிய நம் ஆரூயிர்த் தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3. ஒவ்வொரு ஆண்டும், அவரை நேரில் கண்டு வாழ்த்துகள் பெறும், முதல் ஆளாக இருப்பேன். தந்தையைக் காணும் தனயனாக அல்ல, தலைவரைக் காணும் தொண்டனாக, அவரது கோடானுகோடி தொண்டர்களில் ஒருவனாக நேரில் வாழ்த்துகளைப் பெறும்போது யானையின் பலம் உடலிலும், உள்ளத்திலும் பரவியது போன்ற உணர்வு ஏற்படும்.

ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் தலைவர் கருணாநிதியின் கொள்கை முழக்க உரை கேட்டு நாம் மட்டுமல்ல, நாடே ஊக்கம் பெறும். ஜூன் 3-ந் தேதி தலைவரின் பிறந்த நாள் என்பது, தி.மு.க.வின் திருநாள். தமிழர்களின் பெருநாள். தலைவர் கருணாநிதி இல்லாமல், அவரது பிறந்தநாளை முதல் முறையாகக் கொண்டாடுகிறோம். இல்லை.. இல்லை.. நம் ஊனோடும்,  உயிரோடும் கலந்திருக்கின்ற தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம்.

இயற்கையின் சதியால் அவர் நம்மிடையே இல்லாமல் இருக்கலாம். நம் உள்ளத்தில், உணர் வினில், ஒவ்வொரு செயல்பாட்டில், இயக்கத்தில், கொள்கையில் என எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவர் தந்த பயிற்சியால், அதனடிப்படையில் நாம் மேற்கொண்ட முயற்சியால், ஜனநாயகம் காக்கும் தேர்தல் களத்தில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது.

மகத்தான இந்த வெற்றியை தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கும் வகையில் ஜூன் 3-ந் தேதியன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெறும் மாபெரும் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்நிகழ்ச்சிக் காக சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.வும், அவருக்கு பக்கபலமாக கட்சி நிர்வாகிகளும் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

உங்களில் ஒருவனான நானும், கட்சி முன்னணியினரும் சிறப்புரை ஆற்றுகின்ற இப்பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சி தலைவர்களும், ஆதரவு வழங்கி வரும் அரசியல் பொதுநல அமைப்பினரும் பங்கேற்று தலைவர் கருணாநிதியின் புகழையும், தி.மு.க. பெற்றுள்ள வெற்றியின் சிறப்பையும் எடுத்துரைக்க இருக்கின்றார்கள்.

தி.மு.க. நம் குடும்பம். நம் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். தலைவர் கருணாநிதி நம் குடும்பத் தலைவர். அவரது பிறந்தநாள் விழா என்பது நம் வீட்டு விழா. வீட்டு விழா மட்டுமல்ல, தமிழ்நாட்டு விழா. தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றிய பிறந்தநாள்விழா பொதுக்கூட்டங்களுக்கு எப்படி நாம் ஆர்ப்பரித்துத் திரள்வோமோ அப்படியே அவருக்கு இந்த வெற்றியைக் காணிக்கை செலுத்தி டும் பெருவிழாவிலும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர் பட்டாளத்துடன் ஆர்ப்பரித்து அணி திரண்டிட வேண்டும்.

அண்ணாவின் அருகே ஓய்வு கொள்ளும் தலைவர் கருணாநிதியைத் தாலாட்டும் வங்கக் கடல் அலைகளைவிட அவரது தொண்டர்களாம் உங்களின் வருகை எனும் அலைகள் அதிகமாக இருந்திட வேண்டும். ஜூன் 3-ந்தேதி அன்று நந்தனத்தில் கூடிடுவோம். வெள்ளமெனத் திரண்டு, வெற்றியின் நாயகர் கருணாநிதிக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றியினைத் தெரிவிப்போம். நம் லட்சியப் பயணத்தில் பெற்றுள்ள பெறப்போகின்ற மகத்தான வெற்றிகளைத் தலைவர் கருணாநிதிக்கு காணிக்கையாக்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.