கொல்கத்தா.
துர்கா பூஜை மேடைகளுக்குச் செல்ல மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக கொல்கத்தாவில் சாய்வு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நவராத்திரி திருவிழா மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை என்னும் பெயரில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. மாநில தலைநகரான கொல்கத்தாவின் அனைத்துப் பகுதிகளிலும் பூஜை மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து பூஜை செய்வது வழக்கமாகும். இந்த பூஜைகளை ஆங்காங்கே உள்ள குழுவினர் ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில் தெற்கு கல்கத்தாவில் உள்ள சமாஜ்சேபி சங்கம் என்னும் குழு மிகவும் பிரம்மாண்டமான முறையில் இந்தப் பகுதிகளில் பூஜைகளை நடத்தி வருகின்றது. இந்த பூஜைகளுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இந்த சங்கம் இவ்வருடம் மேடையின் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் சாய்வுப் பாதைகள் அமைத்துள்ளன.
இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலர் அரிஜித் மொயித்ரா “ஒவ்வொரு வருடமும் நாங்கள் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்த வருடம் மேடையில் ஏறும் மற்றும் இறங்கு,ம் இடங்களில் சாய்வுப் பாதைகள் அமைத்துள்ளோம். அவர்களுக்கு உதவ இளம் தொண்டர்கள் இருபுறமும் இருப்பார்கள்.
அலிபூர் சர்பொஜொனின் என்னும் இடத்தில் உள்ள பூஜை மேடை சாலையில் இருந்து மிகவும் தூரத்தில் உள்ளது. எனவே சக்கர நாற்காலியில் வரும் பக்தர்கள் வசதிக்காக இந்த சாய்வு பாதைகள் பிரதான சாலை வரை அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த தனிக் குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.