ஜோத்பூர்:
இஸ்லாமியரை எரித்துக் கொன்றவரை கவுரவிக்கும் வகையில் ராமநவமி அன்று அலங்கார ஊர்தி செலுத்தப்பட்டது ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் பிறந்த தினத்தை ராமநவமி என்று இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக வட இந்திய பகுதிகளில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் ஆயுதங்களுடன் ஊர்வலம் நடத்துவதும் வழக்கமாக இருக்கிறது.
இப்படி ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்வதால் வன்முறை சம்பவங்கள் நேரிடுகிறது.
அதே போல ராமநவமி அன்று ராமர் உருவத்தை வைத்து ஊர்திகளை இழுத்துச் செல்வதும் நடக்கும். அப்படி ஓர் ஊர்திதான் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
அப்பாவி இஸ்லாமிய முதியவர் முகமது அஃப்ராசுல் என்பவரை கொடூரமாக கொலை செய்த சாம்புலால் ரேகர் என்பவரை கவுரவிக்கும் வகையைில் அவர் போலவவே உடை அணிந்து கோடரியை கையில் வைத்திருக்கும் ஒருவரை ரதத்தில் வைத்து இழுத்துச் சென்ற நிகழ்வுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமிய முதியவரை கொலை செய்த சாம்புலால் ரேகர், லவ் ஜிகாத் பிரச்சினையால் இக்கொலையை செய்ததாக அப்போது தெரிவித்திருந்தார். அது பொய் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில்தான் அவரை கவுரவிக்கும் வகையில் ரதம் ஏற்பாடு செய்யப்பட்டுளளது.
ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்த ஜோத்பூர் சிவசேனா இணை பொருளாளர் ஹரி சிங் பன்வார் பேசுகையில், “ரேகருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம். இந்துத்துவா மீதான அவருடைய ஈடுபாடு எங்களை மிகவும் ஈர்க்கிறது. யாருடைய உணர்வையும் புண்படுத்தும் நோக்கம் என்பது கிடையாது.,” என தெரிவித்தார்.
ஜோத்பூர் பகுதி காவல்துறை அதிகாரி அமன்தீப் சிங் பேசுகையில், இவ்விவகாரம் தொடர்பான தகவல்களை மீடியாக்கள் மூலம் அறிந்தோம். மற்றபடி அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார்.