ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில்
14வது நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமேஸ்வரம் ஸ்ரீ நம்பு நாயகி அம்மன் கோவில் தலவரலாறு
அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால் தாழை அம்மன் நம்பு நாயகி அம்மனாக என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நம்பு நாயகி அம்மன் ஆலயமானது.
ராமேஸ்வரம் மக்களிடம் மதிப்பு பெற்ற கோவிலாகவும், பெரும்பாலான உள்ளூர் மக்களின் குலதெய்வமாகவும் நம்புநாயகி அம்மன் ஆலயம் விளங்குகிறது.
ராமநாதசுவாமி திருக்கோவிலில் இருந்து தெற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில், தனுஷ்கோடி செல்லும் சாலையில், புதுரோடு பகுதியில் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் நிகழும் தசரா திருவிழாவிற்காக இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். 14- வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை, ராமேஸ்வரத்தை சேர்ந்த உள்ளூர்வாசிகளே கட்டியுள்ளனர். கி.பி.1830-ல் இந்தக் கோவிலானது ராமநாதசுவாமி கோவில் சமஸ்தானத்துடன் இணைக்கப்பட்டது.
இந்த ஆலயமானது காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும். இக்கோவிலை சுற்றிலும் தனுஷ்கோடி மண்ணால் மேடு மேடாக அமைந்திருக்கும். சுற்றிலும் ஆலமரங்கள் அமைந்து இக்கோவிலுக்கு சென்று ஆலமரத்தடியில் அமர்ந்தால் மனநிம்மதி உண்டாகும் என்பது ஐதீகம்.
கோவிலின் தலவரலாறு:-
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் முழுவதும் தாழை மரங்கள் நிறைந்து காணப்பட்டது. பார்ப்பதற்கு அழகிய வனமாக தாழை மரங்கள் சூழ்ந்து காட்சி அளிக்கப்பட்டிருந்தது.
அப்போது வீட்டில் சமையல் செய்வதற்கு தேவையான விறகிற்காக தாளை மரம் ஒன்றை வெட்டும்போது மரத்திலிருந்து ரத்தம் போன்று வந்துள்ளது. அப்போது மரம் வெட்டியவர் பயந்து ஓடி சென்று ஊர் மக்களிடம் கூறியுள்ளார். ஊர் மக்கள் ஒன்று திரண்டு அம்மரத்தை பார்த்தனர்.
மரத்தில் ரத்தம் வந்த இடத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஒருவர் சாமி ஆடதொடங்கினார். அப்போது அவர் ”இந்தப் பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியில் எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள்” என்று கூறியுள்ளார்.
ரத்தம் பீறிட்ட இடத்தில் விரலிமஞ்சளை வைத்து பூசினர், ரத்தம் நின்றது. பூமியில் மறைந்து இருந்த அம்மனை பூமியிலிருந்து தோண்டி எடுத்தனர். சிறுகூரையில் கோவில் அமைத்து வழிபாடு செய்தனர். அது முதல் அப்பகுதி மக்கள் எவ்வித குறையுமின்றி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
பின்பு காலப்போக்கில் இக்கோவிலை குலதெய்வமாக வழிபடுபவர்கள் மற்றும் ராமநாதசுவாமி சமஸ்தானத்துடன் இணைந்து கோவில் கட்டப்பட்டது. அம்மனை நம்பி வந்து வேண்டுவது நடப்பதால் தாழை அம்மன் நம்பு நாயகி அம்மனாக என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் நம்பு நாயகி அம்மன் ஆலயமானது.