ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம் 5 நாட்களுகு பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஐந்து நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம் நடத்தி வரும் மீனவர்களை நேற்று மாலை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் மீனவர்கள் மத்தியில் பேசுகையில்,
“உங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளோம். உடனடியாக 3 கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். அதில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 87 விசைப்படகுகளுக்கான நிவாரண நிதியை உயர்த்தி கேட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார்.
அதேபோல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்கள் மற்றும் படகுகள் மீதான வழக்கு விசாரணைக்கு வாதாட அரசு சார்பில் வக்கீல் ஒருவரை நியமித்து மீனவர்களை மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை கடற்படையால் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் மீனவரின் குடும்பத்துக்கு தமிழக அரசால் நாள் தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.350-ல் இருந்து உயர்த்தி வழங்கப்படும் அதற்கான அறிவிப்பையும் முதல்வர் அறிவிக்க உள்ளார்.
மற்ற கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசு மூலம் மட்டுமே செய்ய முடியும். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறைக்கும் அழுத்தம் கொடுத்து அந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்படும்”
என உறுதி அளித்திருந்தனர்.
இதையொட்டி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டு மார்ச் 21 ஆம் தேதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து ரயில் மறியல் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.