கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுக்கர் மறைந்த தனது பயிற்சியாளரின் உடலை இறுதி அஞ்சலிக்கு சுமந்து சென்றார்.
கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்து கிரிக்கெட் ரசிகா்கள் அனைவருக்கும் ரோல் மாடலாக திகழ்பவா் சச்சின் டெண்டுல்க்கா். சிறு வயது முதலே கிரிக்கெட் மீது கொண்ட அதீத காதலால் பல்வேறு சாதனைகள் புரிந்து அனைவர் மனதிலும் நீங்கா இடம்பெற்றவர் சச்சின் டெண்டுல்க்கர். சதத்திற்கே சதம் அடித்து வரலாற்று சாதனை புரிந்தவர் சச்சின். சர்வதேச அளவிலான போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சச்சின் புதிய வரலாற்றையே படைத்தவர்.
சச்சின் டெண்டுல்கா் முதலில் பந்து வீச்சில் தான் கவனம் செலுத்தினாராம். ஆனால், அவரது தொடக்க கால பயிற்சியாளரான ரமாகாந்த் அச்ரேக்கா், சச்சினுக்கு பேட்டிங் நன்றாக வரும் என்பதை அறிந்து பேட்டிங்கில் கவனம் செலுத்துமாறு கூறியுள்ளாா். அதன்படி பேட்டிங் ஆடத் தொடங்கிய சச்சின் இன்று பல்வேறு சாதனைகளை தமதாக்கி கொண்டார்.
இந்நிலையில், நேற்று முன் தினம் வயது முதிர்வு காரணமாக ரமாகாந்த் அச்ரேக்கா் காலமானாா். தனது பயிற்சியாளர் ரமாகாந்த் அச்ரேக்கரின் மறைவு செய்தி அறிந்ததும் இரங்கல் தொிவித்த சச்சின் டெண்டுல்கா் “அச்ரேக்கரின் மறைவால் இனி சொா்க்கத்திலும் கிரிக்கெட் வளம் பெறும். எனது கிரிக்கெட் உலகின் ஏ பி சி டி யை அவரிடம் தான் கற்றேன். இன்று நான் இருக்கும் இடத்திற்கு அடித்தளம் இட்டவா் அவா்தான்“ என்று புகழ் அஞ்சலி செலுத்தினாா்.
இதனை தொடர்ந்து ராமாகாந்த் அச்ரேக்கரின் இறுது சடங்குகள் நேற்று மாலை நடைபெற்றன. மும்பை தாதர் பகுதியில் அவரது இறுது ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சச்சின் தனது ஆசானிற்கு நன்றி செலுத்தும் விதமாக அவரது உடலை இறுதி சடங்கிற்காக தோளில் சுமந்து சென்றார்.
களங்கிய கண்களுடன் கலந்து கொண்ட சச்சின் தனது ஆசானின் உடலை சுமந்து சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.