சென்னை.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஓராண்டாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார்.
தற்போது அவரது உடல்நிலை ஓரளவு குணமடைந்துள்ளதால், சில நாட்களுக்கு முன்பு முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார்.
அப்போது அவரை ராமதாஸ் வாழ்த்தி அறிக்கை விட்டார். அதில், கருணாநிதி உடல்நலம் தேறி முரசொலி அலுவலகம் சென்றதில் மகிழ்ச்சி என்றும் விரைவில் முழு உடல்நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று திடீரென கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை ராமதாஸ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கருணாநிதியை சந்தித்தது குறித்து ராமதாஸ் கூறும்போது, திமுக தலைவர் மு.கருணாநிதி நூறாண்டுக்கு மேல் வாழ வேண்டும் என வாழ்த்தியதாகவும், தம்மை கருணாநிதி புன்சிரிப்புடன் வரவேற்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
இது இரு கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.