மின்கசிவு உயிர் இழப்புகளை தடுப்பதில் தமிழக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“சென்னை கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும், துயரமும் விலகும் முன்பே மேலும் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்திருக்கிறார். மழை மற்றும் மழை சார்ந்த விபத்துகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற தமிழக அரசு தவறியது கண்டிக்கத்தக்கதாகும்.
திருவாரூர் மாவட்டம் மணலகரத்தைச் சேர்ந்த கலியபெருமாள் என்ற விவசாயி, அவரது வயலில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றச் சென்ற போது மழை நீரில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்து உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆட்சியாளர்களின் அலட்சியம் தான் காரணமாகும்.
கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று மின்சாரக் கசிவு சார்ந்த உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசும், மின்வாரியமும் படுதோல்வி அடைந்து விட்டன. இனியாவது இத்தகைய உயிரிழப்புகளைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிர்இழந்த விவசாயி கலியபெருமாளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” இவாவாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.